நன்றி மறவாத பண்பு என்பது மனிதகுலத்தை உன்னத நிலைக்கு உயர்த்தும் என்பது நம் முன்னோர் வாக்கு. ராமலட்சுமணர்களை நாகாஸ்திரப் பாதிப்பிலிருந்து சஞ்சீவி மலையைத் தூக்கி வந்து காப்பாற்றிய அனுமனுக்கு ராமன் நன்றி சொல்லும் போது “உன்னில்ப் பிறந்தோம்” என்று தாய் ஸ்தானத்தில் வைத்துப் பேசுகிறான். அந்தச் சொல்லை வெல்லும் சொல் இல்லை என்பது அறிஞர்களின் கூற்று. இப்போது நாங்கள் ரசிகமணி டிகேசி வலைத்தளம் (WebSite) உருவாக்குவதற்கு உதவிய உள்ளங்களுக்கு நன்றி சொல்ல இருக்கிறோம். ரசிகமணி டிகேசி அவர்களின் எழுத்தை “கம்பர் தரும் காட்சி” என்ற தலைப்பில் சுமார் 10 வருடங்கள் தொடர்ந்து வெளியிட்ட கல்கி அவர்களுக்கும், தற்போது ரசிகமணி தொடர்பான பல புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிடக் கொடுத்த கல்கி அலுவலக நிர்வாகிகளுக்கும் நன்றி! ரசிகமணி டிகேசி அவர்களின் கட்டுரைகளை முதன் முதலில் புத்தகமாகக் கொண்டு வரக் காரணமாயிருந்த மு. அருணாசலம் பிள்ளை அவர்களுக்கு நன்றி!
1953ல் ராஜாஜி தலைமையில் குற்றாலத்தில் கம்பர் தரும் ராமாயண அரங்கேற்ற விழாவைச் சிறப்புடன் நடத்திய KVALM ராமநாதன் செட்டியார், குழந்தையன் செட்டியார் குழுவினருக்கு நன்றி! நூற்றாண்டு விழா எடுத்த தமிழக அரசுக்கும், டிகேசி நூல்களை நாட்டுடைமை ஆக்கிய தமிழக அரசுக்கும் எங்கள் இதயங்கணிந்த நன்றி! நூற்றாண்டு விழா மலர் கொடுத்த திரு. டி.டி.திருமலை குழுவினருக்கும் 125 விழாவில் “தமிழ்க்களஞ்சியம்” கொண்டு வந்த திரு.ரவீந்திரன் மற்றும் திரு.மரபின்மைந்தன் முத்தையா அவர்களுக்கும் நன்றி!
தொடர்ந்து வருடா வருடம் ரசிகமணிக்கு விழா எடுத்துக் கொண்டிருக்கும் காந்தி கல்வி நிலைய “மல்லிகை” இலக்கிய அமைப்புக்கு நன்றி! ரசிகமணி டிகேசியைப் பற்றி ஆய்வு செய்து M.Phil., பட்டம் பெற்ற திரு.பாலமுருகன் அவர்களுக்கும்,முனைவர் பட்டம் பெற்ற திரு.ச.ஈஸ்வரன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! ரசிகமணி டிகேசியுடன் பழகி அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக புத்தகங்கள் எழுதி சிறப்பு செய்த பாஸ்கரத் தொண்டைமான், எஸ்.மகாராஜன், வித்வான்.ல.சண்முகசுந்தரம், கி.ராஜ நாராயணன், ராஜேஸ்வரி நடராஜன், எஸ்.வி.எஸ். ஆகியோருக்கும் நன்றி! ரசிகமணியை குழந்தையாக உருவகம் செய்து பிள்ளைத் தமிழ் பாடிய கோட்டையூர் வள்ளி முத்தையா அவர்களுக்கும் நன்றி!
ரசிகமணியின் பெருமையை,தமிழுக்குச் செய்த தொண்டைப் போற்றி நூல்கள் பதிப்பித்து வெளியிட்ட புதுமலர் பதிப்பகம், புதுமைப் பதிப்பகம், தமிழ் மண் பதிப்பகம், பொதிகை மலை பதிப்பு, மகாகவி பாரதி அறநிலை, உயிர்மை பதிப்பகம், சாகித்ய அகாடமி, அமுத நிலையம், அன்னம், வானதி, ராஜபாளையம் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், கலைஞன் பதிப்பகம், காவ்யா பதிப்பகம், மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ், ஸ்டார் பிரச்சுரம் ஆகிய நிறுவனங்களுக்கும் எங்கள் இதய பூர்வமான நன்றி!
இந்த வலைத்தளம் (Website) உருவாக உந்து சக்தியாகவும் முழு முதற்காரணமாகவும் இருந்த அமரர் வே.ஜெயபால் அவர்களுக்கும், தற்போது வலைதளத்திற்கு ஆக்கப்பூர்வமான உதவிகளைச் செய்த ரசிகமணி அன்பர்களுக்கும், ரசிகமணியின் புத்தகங்களையெல்லாம் ஸ்கேன் செய்து கொடுத்த சங்கரி ஜெராக்ஸ் நிறுவனத்தாருக்கும் நன்றி!