"தமிழருக்குத்
                தமிழே
                      துணை"
என்னும் மந்திரத்தை தமிழர்களிடம் சொன்னவர் டி.கே.சி.
டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களை தமிழ் ஆர்வலர்களும், இலக்கிய ரசிகர்களும், நண்பர்களும் அன்புடன் டி.கே.சி. என்று அழைத்தனர். டி,கே,சி, என்ற மூன்றெழுத்தால் தமிழகம் முழுவதும் மதிக்கப்பட்டவர் ஆனார் அதுமுதல்.
"ரசிகர் என்றால் தேன்வண்டைப்போல் அனுபவிப்பதுதான். மறுபடியும் மறுபடியும் புஷ்பத்தில் வந்து விழவேணும். கவியை விட்டு நம்மால்ப் போக முடிகிறதா. இல்லை"
மேலேகண்ட டி.கே.சி.யின் வாக்கு அவரையே நமக்கு இனம் காட்டுகிறது.
கவிதையை அனுபவிக்க வேண்டும். கவிதையிலேயே மூழ்க வேண்டும். இதுதான் டி.கே.சி.க்கும் பிற தமிழறிஞர்களுக்கும் இடையில் இருந்த பெரிய வித்தியாசம்.
எந்தவொரு கலைஞனுக்கும் தான் வெளிப்படுத்தும் கலை ஒரு ரசிகனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுபவிக்கத் தக்கதாய் அமையவேண்டும் என்பதுவே குறிக்கோளாக இருக்கும்.
ரசிகனால் ரசிக்கப் படுவதற்காகவே தனது கவிதை இருத்தல் வேண்டும் என்ற எண்ணத்துடனேயே கவிஞன் கவிதையைப் படைத்து அளிக்கிறான்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு 1000 ஆண்டுகள் கழிந்த பிறகு தோன்றிய ரசிகர்தான் ரசிகமணி டி.கே.சி.
டி.கே.சி. வாழ்வு முழுமையும் கம்பர், கம்பர் என்றே கூறி வந்தவர். கம்பரை அனைவருக்கும் அறிமுகப் படுத்துவதும், கம்பர் கவியை அனுபவிக்கச் செய்வதுமே டி.கே.சி. அவர்களின் மூச்சுக் காற்றாக இருந்துள்ளது.
கம்பருக்காகவும் தமிழுக்காகவும் தமிழ் நாட்டில் பிறப்பெடுத்து வந்தவர் ரசிகமணி டி.கே.சி.
டி.கே.சி.க்கு குருவும் கம்பர் தான். கடவுளும் கம்பர் தான்.
ரசிகமணி டி.கே.சி.யின் பெருமையை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் எவ்வாறு கணித்தறிகின்றார் என்பதை இப்போது பார்க்கலாம்:
"ராமாயண கதை நம்முடைய நாட்டின் தங்கச் சுரங்கம். அதிலும் கம்பன் பாடிய ராம கதை இருபத்தி நான்கு மாற்று அபரஞ்சி. இந்தத் தங்கத்தை எடுத்துக் காட்டிய தங்க நிபுணர்களுக்குள் நம்முடைய டி.கே.சி. அவர்கள் முதல் இடம் பெற்று விட்டார், இதை யாரும் எந்தப் புலவரும் மறுக்க முடியாது.
ஸ்ரீராமபிரான் எப்படிக் கம்பன் உள்ளத்தில் மற்றும் ஒரு முறை அவதரித்தானோ, அவ்வாறே கம்பனும் டி.கே.சி.யின் உள்ளத்தில் மறுபடியும் அவதரித்தான், தற்காலத் தமிழருக்காக என்று நான் சொல்லுவேன்"
கம்பர் கவிதைகளை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வித்ததைப் போல, மேலும் பல நூலாசிரியர்களையும், தனிப் பாடல்களையும் எடுத்துச் சொல்லி கற்றோரும் மற்றோரும் உணர்ந்து கொள்ளச் செய்தார் ரசிகமணி டி.கே.சி. என்பதையும் எண்ணிப்பார்த்திட வேண்டும்.
டி.கே.சி.அவர்கள் தமிழர்களுக்கு தமிழ் உணர்வு ஊட்டிய மகான். ஆங்கில மோகத்தில் மூழ்கிக் கிடந்த பற்பல அறிஞர்களையும் தமிழிலே பேசவும் எழுதவும், தமிழ் மேல் ஆசை கொள்ளவும், தமிழார்வம் மிக்கவர்களாக உருமாற்றம் பெற வைத்த அரும்பணியைச் செய்தவரும் டி.கே.சி.தான் என்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை அடையலாம்.
கம்பரை எவ்வாறு தமிழ் மக்கள் இனம் கண்டு கொள்ள வைத்தாரோ அதேபோன்று தம் சமகால கவிஞர் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களையும் தமிழ் மக்களிடையே எடுத்துச் சொல்லி கவிமணியின் பெருமையை உணர்ந்து கொள்ளச் செய்தவரும் டி.கே.சி.தான்.
கவிமணி அவர்கள் ரசிகமணி குறித்து எழுதிய சில வரிகள் கீழே தரப்படுகின்றன:
"கம்பராமாயணத்தை இன்று தமிழுலகம் அறிவதற்கும் மதிப்பதற்கும் படிப்பதற்கும் காரணமாயிருந்தவர் நம் ரசிகமணி அவர்களே. ஷேக்ஸ்பியர் கவிதைத் தரத்தைவிடக் கம்பன் கவிதை ஒரு சிறிதும் தாழ்வில்லாதது என்று சொன்னாற்போதாது. அதனினும் மேம்பட்டதாகும் என்று ஆங்கிலம் கற்ற புலவர்களிடையே அஞ்சாமல் எடுத்துக் கூறின ஆண்மையாளர் அவர்.
அந்தக் கருத்தை எழுத்துக்களின் மூலமும் சொற்பொழிவுகளின் மூலமும் ஓயாமல் எடுத்து விளக்கி நிலைநாட்டிக் கம்பர் கவிதைக்கு ஏற்றம் தந்த பெருமை நம் ரசிகமணி அவர்களையே சாரும்
ஆங்கிலம் கற்றவரே கற்றவரென்றும், தமிழ்க் கல்வி இழிவானது என்றும், தமிழில் பேசுவதும் எழுதுவதும் அநாகரிகமென்றும் எண்ணி வந்த காலமொன்றிருந்தது.
பட்டதாரிகள் பலர் மேடை மீதேறி நின்று எனக்குத் தமிழில் பேச வராது; ஆங்கிலத்திலேதான் பேச முடியும் என்று பெருமையோடு சொல்லி வந்தார்கள். அந்தக் காலத்தில் நமது ரசிகமணி 'தமிழில் சொல்ல முடியாதது என்ன உண்டு?' என்று ஆர்வத்தோடு கூறி, அவர்களைத் தமிழாசையும் கவிதை வெறியும் கொள்ளச் செய்தார்கள்.
அவர்,யாவருக்கும் உத்தம நண்பர், எனக்கு உயிர் நண்பர். என்னைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் சென்று உபசரித்ததை நான் என்றும் மறக்க முடியாது. அன்னை போலிருந்து என்பால் அன்பு சொரிந்தார். அருவியில் நீராட்டினார். அருகிலிருந்து உணவூட்டி உபசரித்தார். என்னைப் பாராட்டினார். என் கவிதைகளைப் பாராட்டினார்."
டி.கே.சி.அவர்கள் மரணம் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தியோடு இந்த அறிமுக உரையை நிறைவுக்கு கொண்டுவருவோம்:
"டி.கே.சி. என்று ஒருவன் இருந்தான். அவன் ' தமிழைப் போன்ற உயர்ந்த மொழி உலகத்திலேயே கிடையாது. கம்பரைப் போன்ற உயர்ந்த கவிஞன் உலக இலக்கியத்தில் கிடையாது' என்று சொல்லுவான் என்பதை நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்களையும் சொல்லச் செய்ய வேண்டும். 500 ஆண்டுகள் அல்லது, 1000 ஆண்டுகள் கழிந்த பின்னாவது நான் சொன்னதை உண்மை என்று உலகமே ஒப்புக்கொள்ளும்"
வாழ்க்கைக்குறிப்பு :
டி .கே .சி பெயர் காரணம்
   டி - தீத்தாரப்பமுதலியார்
   கே - கிளங்காடு (பூர்விகம் )
   சி - சிதம்பரநாதமுதலியார்
கி .பி 1881 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி (18-8-1881) ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் -கிருஷ்ண
ஜெயந்தி அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார் . இவரது பெற்றோர் தீத்தா ரப்பமுதலியார் மீனம்மாள் அண்ணி .
  ஆரமபக்கல்வி தென்காசியிலும் உயர்கல்வி திருச்சியிலும் பட்டப்படிப்பு (B.A) சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும்
சட்டப்படிப்பு (B.L) திருவனந்தபுரத்திலும் படித்தார்கள் .
  1908ஆம் வருடத்தில் தனது மாமா மகளான பிச்சம்மாளை திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுக்கு 1909ஆம் வருடத்தில் தீபன் என்ற தீத்தாரப்பன் பிறந்தார் .
  சிறிதுகாலம் வண்ணார்பேட்டையில் வழக்கறிஞர் பணி புரிந்தார்கள் . . அதன்பின் மலேரியா காய்ச்சல் வந்த
பொழுது கம்பராமாயணம் படிக்க ஆரம்பித்தார். வழக்கறிஞர் தொழிலை மறந்தார் .அதனால் இலக்கியப்பணி
ஆரம்பம் வட்டத்தொட்டி நட்புகுழாம் ஆரம்பம் .
  1928-1930. ---- சட்டமேலவை உறுப்பினர்
  1930-1935. ---- இந்து அறநிலையத்துறை ஆணையர்
1941 ஆண்டு தன் மகன் தீபன் இறந்த பின்னர் குற்றாலத்தில் குடும்பத்தாருடன் வாசம் செய்தார்.
குற்றாலத்தில் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் பணியாற்றியும் விருந்தோம்பல் வேள்வி செய்தும்
வாழ்ந்து வந்தார். 16.02.1954 அன்று நல் விருந்து வானத்தவர்க்கு என்னும் வள்ளுவரின் வாய்மொழிக்கு
இணங்க இவ்வுலக வாழ்வை நீத்தார்.