Rasigamani TKC
Rasigamani TKC
    கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

"அன்னை போல் என்னை அருவியில் நீராடி
இன்னமுதும் பக்கத்து இருந்தூட்டி - தன்னோடு
தங்குதங்கு என்று சொன்ன தங்கக்குணத்தானை
எங்குநான் காண்பேன் இனி"

கம்பராமாயணத்தை இன்று தமிழுலகம் அறிவதற்கும் மதிப்பதற்கும் படிப்பதற்கும் காரணமாயிருந்தவர் நம் ரசிகமணி அவர்களே. ஷேக்ஸ்பியர் கவிதைத் தரத்தைவிடக் கம்பன் கவிதை ஒரு சிறிதும் தாழ்வில்லாதது என்று சொன்னாற்போதாது, அதனினும் மேம்பட்டதுமாகும் என்று ஆங்கிலம் கற்ற புலவர்களிடையே அஞ்சாமல் எடுத்துக் கூறிய ஆண்மையாளர் அவர்.    ராஜாஜி

ஸ்ரீராமபிரான் எப்படிக் கம்பன் உள்ளத்தில் மற்றும் ஒரு முறை அவதரித்தானோ, அவ்வாறே கம்பனும் டி கே சி யின் உள்ளத்தில் மறுபடி அவதரித்தான், தற்காலத்துத் தமிழருக்காக, என்று நான் சொல்லுவேன்.    கல்கி

உண்மையான கவிதையின் உருவத்தையும் ஆத்மாவையும் நன்குணர்ந்து, அவற்றைப் பிறருக்கும் புலப்படும்படி காட்டக்கூடியவர் தமிழ் நாட்டிற்குள் டி கே சி யைப் போல் வேறு யாருமில்லை என்று கருதத் தொடங்கினேன். டி கே சி யினால் தள்ளப்பட்ட ஒரு பாட்டைக் கம்பனே நேரில் வந்து "இதை நான் தான் எழுதினேன்" என்று சொன்னாலும், என்னால் ஒப்புக்கொள்ளமுடியாது! அவ்வளவு நம்பிக்கை டி கே சி யின் கவிதை உணர்ச்சியில் ஏற்பட்டது.    கலைமணி பாஸ்கரத் தொண்டைமான்

டி கே சி குற்றாலத்தில் பர்ணசாலை கட்டியிருக்கவில்லை, யோகதண்டமும், கமண்டலமும் தாங்கி நடக்கவில்லை, சடைமுடி, புலித்தோல் ஆடை உடுக்கவில்லை, என்றாலும் பொதிகை முனிவராக வாழ்ந்தார். முத்தமிழையும் வளர்த்தார்.காஷாயம் தரிக்காமல், அன்பையே கோலமாக அணிந்திருந்தார். கமண்டலம் ஏந்தாமல் கையிலே தமிழ்க் கவிதையை ஏந்தினார். கடவுளையும் கவிதையையும் ஒன்றாக மதித்தார்.    ஜஸ்டிஸ் எஸ். மகராஜன்

நம்முடைய ஞானிகள் பலரும் ஆனந்தத்தை அடைவதற்கான பல தந்திரங்களைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். "நான்" என்ற ஒன்று இருக்கிறதே அதை மாத்திரம் மடக்கி விட்டால், ஆனந்தம் பொங்கி வழிய ஆரம்பித்துவிடும் என்று கண்டார்கள். ஆனால், அந்த காரியத்தைச் சாதிப்பதிலே எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அப்படிக் கஷ்டப்பட்டு, ஆணவத்தை வென்று, ஆனந்தத்தை சில ஞானிகள் அடைந்தார்கள்.

இருபது ஆண்டுகள் டி கே சி யோடு நெருங்கிப் பழகினபோது, ஆனந்தத்தை அடைவதற்கு இப்படியெல்லாம் அவஸ்தைப் பட வேண்டாம் என்று தெரிந்தது.உணர்ச்சியோடு கவி உலகத்திலே புகுந்து விட்டால், "தன்னை மறந்த லயம்" தானே பிறந்து விடும் என்று தெரிந்தது. நல்ல பாடலுக்குள்ளே புகுந்து, நோயை மறந்து, ஐந்து மணி நேரம்,ஆறுமணி நேரம் சமாதியிலிருப்பார்கள். கூடியிருக்கும் சகாக்களையும் ஆனந்த அனுபவத்திலேயே அழுத்திவிடுவார்கள். டி கே சி யை விட்டுப் பிரிந்து போன பிறகும் பாடல் நம்மை விட்டுப் பிரிவதில்லை; மனசுக்குள்ளே நின்று ரீங்காரம் செய்யும்; ஆழமான ஒரு மனநிலையிலே நம்மை நிலைக்கச் செய்துவிடும்.    கி.ராஜநாராயணன்

என்னுடைய சின்னவயசில் அன்னப்பறவையைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். தண்ணீர் கலந்த பாலில் பாலை மட்டும் உறிஞ்சி உண்டுவிட்டு தண்ணீரை அப்படியே விட்டுவிடுமாம். டி கே சி யும் ஒரு அன்னப்பறவையே. நல்லதுகளையும் சிறந்ததுகளையும் எடுத்துக் கொண்டார். அதை பற்றியே பேசினார்; பாராட்டினார். போலி கலந்த கவிதைகளில் கவிதையை மட்டும் எடுத்துத் தானும் உண்டு உலகத்துக்கும் கொடுத்தார். தமிழகத்துக்கு இப்படி இன்னொரு அன்னப்பறவை கிடைக்குமா?

ரசிகமணி அவர்களிடமிருந்து நாம் பெற்ற வடிவவிதங்களிலெல்லாம் சிறந்து சோபிப்பது ,அவர் அமர்ந்திருக்க நாமும் அவர்முன் உட்கார்ந்து அவர் பேச நாம் கேட்பதே. உலகத்தின் மகாபெரிய மகான்கள், குரு முனிகள் எல்லோருமே இவ்வித அமர்வுகளிலேயே தங்களை வெளியிட்டிருக்கிறார்கள் . இந்த அமர்வு வாய்க்காத நேரங்களில் ,தனிமையில் சகமனசைத் தேடும்போது ,தூக்கம் வராத நள்ளிரவு நேரங்களில் அவர் கடிதங்களில் பேசுகிறார் .இந்த கடிதத் தொகுப்பு தமிழ் உலகத்துக்கு ஒரு அபூர்வச் செல்வம். தலைமாட்டில் வைத்துக் கொண்டு நினைக்கும் போதல்லாம் கைக்கு வருகிற பக்கங்களைப் படித்து அனுவிக்கலாம் . பாக்கியசாலிகளே நாம்    பன்மொழிப் புலவர் மு கு ஜகந்நாத ராஜா

உலகம் எத்தனையோ ஞானிகளைக் கண்டிருக்கிறது. சிலர் அரசியல் ஞானிகள். சிலர் விஞ்ஞானிகள். சிலர் சமுதாய தத்துவ ஞானிகள். சிலர் மெய்ப்பொருள் ஞானிகள். சிலர் தவ ஞானிகள். ஆனால், ரசிக்கத்துவத்திற்கென ஒரே ஒரு ஞாநியைத்தான் கண்டது. அவரே டி கே சி.    ஆச்சார்ய வினோபாஜி

சத்தியசொரூபமான வினோபாஜியும் சௌந்தர்யசொரூபமான டி கே சி யும் கல்கியின் முயற்சியால் சென்னையில் சந்தித்தார்கள். ரசிகமணி டி கே சி, "சாணிலும் உளன் ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோணிலும் உளன் " என்ற இரண்யவதைப் படலப் பாடலை சவுக்கத்தில் பாதி விளக்கம் செய்துள்ளார்கள். " நீ சொன்ன சொல்லினும் உளன் " என்ற வாக்கியத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே வினோபாஜி உருகிவிட்டார். கம்பனைப் போல இந்தச் சொல்லாட்சியை பிறமொழிக் கவிஞர்கள் எவரும் கையாளவில்லை என்று சொன்ன வினோபாஜி கம்பராமாயணப் பிரதி ஒன்றை வாங்கிப் படிக்கவும் தொடங்கினார்.

ரசிகமணி டி கே சி மறைந்த பின் வினோபாஜி ஜஸ்டிஸ் மஹராஜன் அவர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தின் பகுதி இங்கே தரப்படுகிறது.

"அன்று அவரைச் சந்தித்த சந்திப்பு என்னுடைய ஞாபகத்தில் மிக மிக அழுத்தமாகப் பதிந்து கிடக்கிறது.அதற்கு முன் டி கே சி யை நான் பார்த்தது இல்லை. ஆனால் அன்று அவர் மனம்திறந்து என்னோடு ஊடாடியபோது நீண்டநெடுங்காலமாகப் பழகி வந்த நண்பர் அவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. வெளிப்பகட்டையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு கவிதையின் இதயத் துடிப்பை அப்படியே எடுத்துக் கூறக்கூடிய ' மர்மக்ஞ ரசிகர் ' அவர். அவரைப் போன்ற ரசிகரைக் காண்பது அரிதினும் அரிது."    மகாத்மா காந்தி

ஒரு முறை சென்னையில் வைத்து ராஜாஜி, ரசிகமணி டி கே சி யை மகாத்மா காந்திக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது டி கே சி கம்பராமாயணப் பாடல்கள் இரண்டைப் பாடி விளக்கமும் சொல்லியுள்ளார்கள். அதைக் கேட்டு ரசித்த காந்திஜி "கம்பராமாயணத்தை மூலத்திலேயே படித்து அனுபவிக்க வேண்டுமே! என்ன செய்ய?" என்று கேட்ட போது டி கே சி அவர்கள் சிறிதும் தயங்காமல் "அதற்கு ஒரே வழி நீங்கள் தமிழனாகப் பிறப்பது தான்" என்று சொல்லி விட்டார்.    திரு. கண்ணப்ப சுவாமிகள்

டி கே சி யோடு 3 மணி நேரம் உரையாடி விட்டுத் திரும்பிய ஞானி ஒருவர் சொன்ன வாசகம்.

"டி கே சி கந்தர்வலோகத்தைச் சேர்ந்தவர், வழி தப்பி மண்ணுலகுக்கு வந்து சேர்ந்து விட்டார்"திவான்பகதூர் ஆவுடையப்ப பிள்ளை

"கம்பரும் வெண்ணெய் நல்லூர் வள்ளலும் கலந்து பேசி
இம்பரில் பிறப்போ மாயின் இருகுணம் ஒருங்குசேர
உம்பரின் தேவ தேவை ஒருவரம் கசிந்து கேட்க
செம்பதுமத் தோன் செய்தான் சிதம்பர நாதமாலை"    வித்வான் ல. சண்முகசுந்தரம்

"சைவம் தழைக்கத் தமிழ்த்தழைக்கப் பண்பாட்டின்
மெய்ம்மை தழைத்து விரித்தோங்க -பொய்மையலாம்
தாம்அகல வந்தான் சடைமுடிமேல் திங்களான்
நாமம் டிகேசிஎனக் கொண்டு"

தன்னையும் தன் வாழ்க்கையையும் பார்க்க முடியாத மனிதனால் கலையை எப்படிப் பார்க்கமுடியும்? கவியை எப்படிப் பார்க்கமுடியும்? பிரச்சனைகளோடு சதா மல்யுத்தம் செய்து பழகிப் போனவன் மனிதன். அதனால் கலையோ, கவியோ, பண்பாடோ, எதானாலும் மனிதனுக்கு அவை மல்யுத்தம் செய்யும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்,

டி கே சி யோ கவி, கலை, பண்பாடு, சமயம் முதலியவற்றை உண்மையோடு பார்த்தார்கள். தன்னையும் தன் வாழ்க்கையையும் பார்ப்பதற்காகவே அவர்கள் கவி முதலியவற்றைப் பார்த்தார்கள். அதனால் அவற்றை அனுபவித்தார்கள்.ஆனந்த பரவசமாய்த் திளைத்தார்கள். அனுபவமும் ஆனந்தமும் பொங்கப் பொங்க அவை இரண்டும் இல்லாமல் தத்தளிக்கும் மனிதர்களைப் பார்த்து இரக்கப்பட்டார்கள். மற்றவர்களுக்கும் தம் அனுபவங்களையும் ஆனந்தங்களையும் அள்ளி அள்ளிக் கொட்டினார்கள்.ஏ .என். மகரபூஷணம்

"இதய ஒலி" யும், டி கே சி எழுதியிருக்கும் மற்ற கட்டுரைகளும் வசனத்துக்கு எடுத்துக்காட்டு என்று சொன்னால் இப்போது வெளியிடப்பட்டிருக்கும் கடிதங்களில் அவர்கள் வசன மேதையாக கனிந்து முதிர்ந்து வெளிப்படுவதைக் காண்கிறோம். பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள இடைவெளி அவர்கள் சம்பந்தப்பட்ட மட்டிலும் எப்பொழுதும் மிகவும் குறைந்தே காணப்படும். இந்தக் கடிதங்களில் இடைவெளி அறவே இல்லை என்று சொல்லும்படி இருக்கிறது. கடிதங்கள் எழுதுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே! தமிழில் கடித இலக்கியத்தின் தந்தை டி கே சி தான்!    வே.ஜெயபால்

அருவ விஷயங்களில் கண்டுபிடிப்புகளுக்கு பருப்பொருள்களின் கண்டுபிடிப்புகளை விட கூர்த்த மனம் வேண்டும். ஐன்ஸ்டீனின் கண்டு பிடிப்பை விட பிராய்டின் கண்டு பிடிப்பு அதிக சிரமம்.

நீண்ட காலமாக தமிழ்ச் செய்யுள் என்றால் ஒரு கடினமான பொருள்; அதை உடைத்துக் கொடுப்பதுவே ஆசிரியர்களின் வேலை என்ற எண்ணம் நிலவி வந்தது; ஒரு இன்சுவைப் பழம் என்ற எண்ணம் கிடையாது.

தமிழ்ச் செய்யுள் வகுப்பு என்றால் மாணவர்களுக்கு ஒரு கசப்பான மருந்து சாப்பிடும் நேரம் போலிருந்தது. இந்த நிலையில் தான் முதன் முதலாக கடவுள் என்றால் எளிமை; தமிழ்க்கவி என்றால் அப்படியே; தமிழ்க்கவி மக்களைத் துன்புறுத்த வரவில்லை என்று கூறி அதை நிரூபணமும் செய்தார் டி கே சி.    எஸ் வி எஸ் (டி.கே.சி.யின் தனி செயலாளர்)

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் டி கே சி படித்துக் கொண்டிருக்கும் போதே மகாமகோபாத்தியாய உ வே சாமிநாதய்யரிடம் அறிமுகம் உண்டு. அந்த அறிமுகம் சாமிநாதய்யரின் கடைசிக் காலம் வரை தொடர்ந்தது.

அதன் விளைவாக சாமிநாதய்யர் எளிய பேச்சு நடையில் "கண்டதும் கேட்டதும்", "பழையதும் புதியதும்" போன்ற நூல்களை எழுதினார். நெருடலான பண்டித நடையில் எழுதி வந்தவர் எளிய நடைக்கு மாறுவது என்பது கஷ்டம். டி கே சி யின் கருத்துத் தாக்கத்தால், அதில் உண்மை இருப்பதை உணர்ந்து தமிழ்த் தாத்தா தமது தமிழ் நடையை மாற்றிக் கொண்டது ரசிகமணியின் வெற்றிகளில் மிகச் சிறந்த வெற்றியாகும்.    பி. சி. பலராம ராஜா (டி.கே.சி.யின் தனி செயலாளர்)

நானோ டி கே சி பேரன் நடராஜனோ பள்ளிக்கூடம் சென்றவர்கள் இல்லை.ஆங்கிலம் பள்ளிக்கூடத்தில் படித்தவர்களும் இல்லை. டி கே சி அவர்கள் தான் எங்களுக்கு

ஆங்கிலம் கற்பித்தார்கள். அவர்கள் கற்பிக்கும் பாணி முற்றிலும் மாறுபட்ட பாணியாக இருக்கும்.

A B C D - யிலிருந்து ஆரம்பித்து

C A T - பூனை என்றோ கற்பிக்க ஆரம்பிக்கவில்லை. எடுத்த

எடுப்பிலேயே இந்து பத்திரிக்கையைப் படித்து விளக்குவார்கள். அதையே படிக்கச் சொல்லுவார்கள். நாளடைவில் மொழி பெயர்க்கச் சொன்னார்கள். அர்த்தம் தெரியாத ஆங்கில வார்த்தை வந்தால் ஆங்கிலத்திலே அப்படியே எழுதச் சொல்லிவிடுவார்கள். மறுநாள் அதற்கு

அர்த்தம் சொல்லி விளக்குவார்கள்.இப்படியே நாங்கள் ஆங்கிலம் ஓரளவு கற்றுக் கொண்டோம். ஆங்கிலம் தெரியாது

என்று COMPLEX கொள்ளக்கூடாது.இங்கிலீஸ்காரன் தமிழ் தெரியாது என்று வருந்துவதில்லையே! அதைப்போலவே

பாஷை தெரியாது என வருந்தக் கூடாது. அந்தப் பாஷையை

வருந்திப் படிக்கவேண்டும். ஒரு பாஷையை உத்ஸாகமாகப்

படிக்கப் பழக வேண்டும். முதலில் இலக்கணத்தில் மாட்டிக்கொண்டு மண்டையைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. பாஷை பிறந்த பிறகுதான் இலக்கணம்

பிறந்தது. குழந்தைகள் இலக்கணம் கற்றா பேசுகிறது? பாஷையைக் கற்று, படிக்கக் கற்று, கவிதைகளைப் பாடக் கற்று, அதன் பிறகு இலக்கண இலக்கியங்களில் கைவைக்க வேண்டும் என்பது டி கே சி அவர்களின் வாதம்.    டி டி திருமலை

உலக இதய ஒலி ஆசிரியராக இருக்கும் நண்பர் டி டி திருமலை அவர்களைக் குற்றாலத்திற்கு அழைத்துச் சென்று டி கே சி யிடம் அறிமுகப்படுத்தினேன். பத்து நாட்கள் ரசிகமணியோடு நண்பர் திருமலை தங்கி உறவாடிய பிறகு " சத்தியத்தின் தரிசனத்தையே கண்டு கொண்டேன் " என்று பூரிப்போடு சொன்னார். அது முதற்கொண்டே நண்பர் திருமலை டி கே சி யின் அரிய பக்தராகவே மாறிவிட்டார். உலக இதய ஒலி என்ற பத்திரிக்கையை டி கே சி யின் உபதேசங்களை பிரச்சாரம் செய்வதற்காகவே அவர் தொடங்கினார் என்று சொன்னால் குற்றமில்லை.
            -உலக இதய ஒலி - ரசிகமணி நூற்றாண்டு விழா மலர் வாழ்த்துக்களில் ஜஸ்டிஸ் மகராஜன் கூறியது.    சுஜாதா

எங்கள் இளவயதில் கம்பன் மேல் மிகுந்த ஈடுபாடு ஏற்படுவதற்கு டி.கே.சி. முக்கியக்காரணர். கம்பராமாயணத்தை அதன் பண்டிதத்தன்மை நிறைந்த விரிவுரைகளிலிருந்து விடுவித்தவர் டி.கே.சி.    மனுஷ்ய புத்திரன்

தமிழ் இலக்கிய ரசனை மரபில் ரசிகமணி டி .கே .சி யின் அடையாளம் என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியது. பழந்தமிழ் இலக்கியத்தை அதன் வரலாற்றுப் புனைவுகளிருந்தும் நம்பிக்கைகளிருந்தும் மீட்டு தர்க்கரீதியாக மூலப்பிரதிகளை மீள்பார்வை செய்தவர் அவர். அந்த வகையில் தமிழில் மரபான பண்டித மனப்பான்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது டி.கே.சியின் மனம். அவரது கடிதங்களில் வெளிப்படும் உயர்ந்த இலக்கிய ரசனையும் கலாபூர்வமான வாழ்வியல் நோக்கும் டி.கே.சியின் ஆளுமையினை பன்முகத்தன்மை கொண்டதாக நம் கண்முன் கொண்டு வருகிறது .சுந்தா

"செந்தமிழ்க் கொண்டல் அவர்
தில்லிக்கு வந்திருந்தார்;
வந்த கொண்டல் உருமாற்றி
வைத்திட்டார் இந்நகரை.

தமிழ் மாரி பெய்ததிலே
தில்லி எலாம் தமிழ் வெள்ளம்;
யமுனை நதி பொருநை என
இனம் மாறி ஓடியது.

இக்கரையில் தமிழ்ச் சோலை,
அக்கரையில் தமிழ்ச் சோலை;
இக்கரைக்கும் அக்கரைக்கும்
இணைந்தோடும் இசைத் தோணி.

கரையோர மண்டபத்தில்
கம்பர் கவி பாடுகிறார்;
உரைக்கின்றார் வள்ளுவனார்
ஓங்கியதோர் கோயிலிலே. "டாக்டர்.ஆர்.எம். அழகப்பச்செட்டியார்

அழகை காண்பது ஒரு வகை ஆற்றல். அபூர்வமான ஒருவகை வாய்ப்பு. அது ஒரு வரப்பிரசாதம், ஆனால் டி.கே.சி அவர்களுக்கு அரிதான அந்த வரப்பிரசாதம் எளிதான பொழுது போக்காக வாய்த்துவிட்டது. அழகை தவிர வேறு எதையும் அவர்களுடைய கண் பார்க்காது. மேலும் பார்க்க தெரியாது.
அழகுக்கு அஞ்சலி செய்வதில் அவர்களை மிஞ்சின பக்தரைக் காண்பது அரிது.பெரியசாமி தூரன்

கவிதைக்கு ஒரு தனிப்பட்ட சக்தியிருக்கிறது; நீள நீளப் பேசி விவரிக்க முடியாத உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் நல்ல கவிதை ஒரு வரியிலே எப்படியோ அற்புதமாக வெளிப்படுத்தி விடுகிறது என்கிற உண்மையை டி.கே.சி நன்றாக எடுத்துக் காட்டினார். கவிதையின் சொல் அழகு, சந்த அழகு எல்லாம் அவர் அதைப் பாடிக் காட்டும் போதே உணர்ச்சியோடு வெளிப்பட்டு விடும். கவிதையே தனக்கு விளக்கம் தெரிவித்துக் கொள்வது போல அமையும் அவர் பேச்சு.ராஜா ஸர்.முத்தய்யா செட்டியார்

ரஸிகமணி அவர்கள் தமிழ்நாட்டு இலக்கியங்களை அனுபவிப்பதிலும், தாம் அனுபவித்த இன்பங்களைப் பிறருக்கு வெகு சுலபமான நடையில் எடுத்துக் காட்டி அவர்களை அனுபமிக்கச் செய்வதிலும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அன்பில் சிறந்த நண்பர். ரஸிகமணி அவர்களும், அவர்களுடைய மனைவியாரவர்களும் அவர்கள் இல்லத்தில் நண்பர்களுக்கு அளித்து வந்த உபசரிப்பை யாரும் மறக்க முடியாது. கடவுளிடத்தில் நம்பிக்கையுடன், தாம் எடுத்த காரியத்தைச் செய்து முடிப்பதிலும், தம் கடமையைச் செய்வதிலும் ஒப்பற்றவர். தமிழின் ஆற்றலையும், அழகையும் சிறு குழந்தையும் அறியக்கூடிய தேனினும் இனிய சின்னஞ்சிறு சொற்களால் எடுத்து உணர்த்தக்கூடிய உத்தமர்வள்ளி முத்தையா

அய்யாமேல் ஆசையாய் ஓடையிலே
    அழுகுப் பாமாலையோ உளக்கூடையிலே
கொய்து வந்தேன் வழிப் பாதையில் – அன்புக்
    கள்எனும் மதுவுண்ட போதையிலே

ஒய்யாரப் புன்னகை மந்திரமே – எனை
    ஓயாமல் தினம் கட்டும் தந்திரமே
அய்யாவின் பொன்முகச் சந்திரனே
    அக வீதியில் ஒளிதனைச் சிந்திடுமே

சிதம்பரநாதச் சக்கரையே – இந்த
    சித்தெறும்பின் மேல்கொண்டாய் அக்கறையே
சிந்து தந்த பொதிகைச் சந்தனமே
    சின்ன பேத்தியும் செய்தேனே வந்தனமே

அண்ணன் மார்மூவரும் வைரமணி எந்தன்
    அக்காளோ அழகான தங்கமணி
வள்ளிக்குறத்தியோர் பாசிமணி – எமை
    வடிவாக இணைத்ததோ ரசிகமணிமுனைவர் ச.ஈஸ்வரன்

தமிழ் இசை இயக்கம் மற்றும் மறையும் நிலையிலும், ஒரு சாராருக்கே உரிய நிலையிலும் இருந்த “பரத நாட்டியக்கலைக்குப்” புத்துயிர் தந்து சிறப்புற வாழும்படி செய்த தொண்டு டி.கே.சியை சாரும்.