Rasigamani TKC




டிகேசி கொடை

பண் என்ற சொல்லும் பாடு என்ற சொல்லும் பழந்தமிழ் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள சொற்கள் தாம். ஆனால் அவ்விரு சொற்களையும் இணைத்து “பண்பாடு” என்ற சொல்லைத் தமிழுலகுக்குக் கொடுத்தவர் ரசிகமணி டிகேசி. “கல்ச்சர்” என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ப்பதமாக பண்பாடு என்ற சொல்லை உருவாக்கியவர்.

அகில இந்திய வானொலி நிலையம் என்று தற்போது சொல்லப்படுகிறது. ரேடியோ என்ற சொல்லுக்கு வானொலி என்ற சரியான தமிழ்ப்பதத்தைக் கொடுத்தது ரசிகமணி. பின்னால் வானொலி என்ற இதழ் வெளிவந்தது. அதற்கு ஆசிரியராக இருந்தவர் ரசிகமணியின் புதல்வர் தீபன் என்ற தீத்தாரப்பன் அவர்கள்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக இருந்த போது தமிழக அரசுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை சின்னமாக வைக்க ரசிகமணி பரிந்துரை செய்த போது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினார்.

ஓவியம், சிற்பம் ஆகிய கலைச் செல்வங்களும் டிகேசியின் கலைக் கண்ணோட்டத்திலிருந்து தப்பவில்லை. தென்காசி கோயில் மகா மண்டபத்தில் பத்துத் தூண்களில் வடித்துள்ள சிற்பங்களை உலகறியச் செய்தது. அந்தச் சிற்பங்களையெல்லாம் படமெடுத்து கல்கி தீபாவளி மலரின் வெளிவரச் செய்தவர்.

தென்காசி கோயிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனுக்கு, கோயில் பின்னாளில் கேடு அடையும் என உள்ளுணர்வு சொல்லியதால், “அக்கேட்டினை நீக்கி செப்பனிட்டு சரி செய்வோரை இன்றே பணிகின்றேன்” என்று கல்வெட்டில் பாடலாக வடித்துள்ளான். டிகேசி அக்கல்வெட்டைக் கண்டுபிடித்து அப்பாடலை உலகறியச் செய்தார்கள்.

“ஆராயினும் இந்தத் தென்காசி மேவு பொன் ஆலயத்து
வாராததோர் குற்றம் வந்தால் அப்போழ்து அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்
பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பண்டியனே”!

இப்பாடலைக் கோயிலில் உள்சுவரில் எழுதிப் போட்டிருக்கிறார்கள்.

டிகேசி, குற்றாலத்தில் கிணற்றுக்குள் கிடந்த பெரிய கற்களை வெளியே கொண்டு வரச் செய்த போது அரிய சிலைகள் வெளியே வந்தன. அச்சிலைகளை குற்றாலத்தில் உள்ள சித்திரசபை மண்டபத்தில் நிறுவிய பெருமை ரசிகமணியையே சாரும்.